நாடாளுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட் அச்சடிக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 2018 மார்ச் 30ம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் 336.2 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. மேலும் 2021 பிப்ரவரி 26ஆம் தேதி நிலவரப்படி இது 249.9 கோடியாக குறைந்துள்ளது.

மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது பற்றி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கும். 2016-17ம் நிதியாண்டில் (2016 ஏப்ரல்- 2017 மார்ச்) 354.29 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது.

மேலும் 11.15 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே 2017-18ம் நிதியாண்டில் அச்சடிக்கப்பட்டது. இது 2018-19ம் நிதியாண்டில் 4.66 கோடியாக குறைந்து உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக(2019 ஏப்ரல் முதல்) 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புதிதாக ஏதும் அச்சடிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்காமல் இருப்பது, அதிக மதிப்பிலான பணத்தை கருப்பு பணமாக பதுக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது.

See also  நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்