திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதற்காக இப்போது கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை 5 சவரன் நகை மற்றும் அதற்கு மேல் வைத்துள்ள நகை கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்கள் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் மாவட்ட வாரியாக வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மண்டல இணைப்பதிவாளர்கள் கையொப்பமிட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் 5 சவரன் மற்றும் அதற்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ‘ஒருவரே வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றிருப்பதை கண்டறியவும், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எந்தந்த கூட்டுறவு சங்கங்களில் நகை பெற்றுள்ளார்கள் என்பதை அறியவும், கூட்டுறவு சங்கங்களில் நகை பெற்றுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும். இதற்காக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண், பான் கார்டு ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும்’ என்று கூறியுள்ளனர்.

See also  திட்டமிட்டபடி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்: சத்தியபிரதா சாகு