• அண்ணா பல்கலைக் கழக இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார்கள்.
  • செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் இதுவரை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது.
  • பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது.
  • இந்த செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையவழி மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
  • இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டது.
  • இந்த தேர்வு முடிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும் விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
  • இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இணையவழி தேர்வில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:
  • தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறியப்பட்ட 30 ஆயிரம் மாணவர்கள், மேலும் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு லட்சம் மாணவர்கள் தவிர, மீதமுள்ள மாணவர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
  • இதுபோன்ற மோசமான தேர்வு முடிவுகள் இதுவரை வந்ததில்லை. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
  • இதனால், பொறியியல் கல்லூரிகளே குழப்பத்தில் இருந்து மீளாமல் இருக்கிறது. இந்த தேர்வு முடிவு மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த இணையவழி தேர்வு முடிவுகள் குறித்த குளறுபடிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது;
  • தேர்வில் ஒரு மாணவர் முறை கேட்டில் ஈடுபடுவதாக சந்தேகம் எழும்போதோ அல்லது வழிமுறைகளை பின்பற்றாத போதோ சம்பந்தப்பட்ட மாணவரிடம் அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்து இருக்க வேண்டும்.
  • இதன்முலம் மற்ற பாடங்களின் தேர்வுகளையாவது அந்த மாணவர் முறையாக எழுதி இருப்பார். இந்த தேர்வில் 2 மாதம் கழித்து முறைகேடு சந்தேகம் வருவது நியாயமில்லை.
  • கல்லூரிகள் தேர்வு கட்டணம் செலுத்தாமல் இருப்பதால், மாணவர்களின் முடிவுகளை வெளியிடாமல் இருப்பது தவறான முன்னுதாரண மாகும்.
  • கல்லூரி மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க உதவும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ‘உதவி மையம்’ அமைக்க வேண்டும். அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு சரியான விளக்கம் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
See also  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க முதல்வர் நடவடிக்கை
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
  • இந்த தேர்வு முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் உள்ள குழப்பத்தை கருத்தில் கொண்டு மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு இருக்கிறது.
  • மேலும் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்களின் செயல்பாடுகளை குறித்து கல்லூரி அளவில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதுதொடர்ப்பாக கல்லூரி தரப்பில் தரப்படும் விளக்கங்களின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்குத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும் முறைகேட்டில் ஈடுபடாத மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.