புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், முகவரி மட்டுமே இருக்கும் செல்போன் எண் இருக்காது. ஆதார் ஆணையத்திடம் இருந்து வாக்காளர்களின் செல்போன் விவரங்களை பெற்று வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வாங்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தடை விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி பிரச்சாரம் செய்யப்படுவது தொடர்பாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்து, அரசியல் கட்சி வாக்காளர் செல்போன் எண்களை எப்படி பயன்படுத்தலாம்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சியின் இந்த செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர், ‘இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்குக்கு குறித்து வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் விரிவான பதில் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

See also  சட்ட மன்ற தேர்தல் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு - சுனில் அரோரா