மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 1,269 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், இதுவரை 30,521 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தற்பொழுது மதுரையில் கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது.

கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்கும் பணியில் சுகாதாரத் துறை முழுவீச்சில் இறங்கியது.

அதன்படி, மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரனோ சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டது.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர், சிகிச்சை மைய படுக்கைகளில் பொறுத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆய்வு செய்தார். மேலும், கொரோனா சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த சிகிச்சை மையத்தில் உள்ள 500 படுக்கைகளில், முதற்கட்டமாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. மீதமுள்ள 300 படுக்கைகள் இன்னும் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

See also  கொரோனா 3 - வது அலையை எதிர்கொள்ள ரூ.23,123 கோடி நிதி தொகுப்பு