ஹைலைட்ஸ்:

  • கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.
  • தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது.
  • அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, அறிவியல் தொழில்நுட்பங்களை மதிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நடிகர் விவேகிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமணையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசியை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான்

நடிகர் விவேக்கைப் பார்க்க வந்து மருத்துவமனை வாசலில் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று இல்லை. இப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி நம்மை ஏமாற்றி வருவதாக அவர் கூறினார். யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றுள்ளார் என்றும் மன்சூர் அலிகான் பேட்டியில் தெரிவித்தார்.

அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இருக்கிறார் மன்சூர் அலிகான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் இவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள்.

இதையடுத்து மன்சூர் அலிகான், கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டும், அவர் மீது உள்ள வழக்கை ரத்து செய்யச் சொல்லியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் மனுவில், எனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. தற்செயலாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்தை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயப்படுத்தக் வேண்டாம் என்று தான் கூறினேன் தவிர, தடுப்பூசி பற்றி தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீனையும் வழங்கினார்.

‘கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டும் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் நிலையை புரிந்து நாம் செயல்பட வேண்டும். தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியது. இந்த அபராதத் தொகை ரூ.2 லட்சத்தை தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.