தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் தலைவர்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதி சில சமூக விரோத சக்திகள் பைக் பேரணி நடத்தி வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

இந்த தடையின் படி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பைக் பேரணி நடத்தக்கூடாது. இந்த தடை உத்தரவு தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளுக்கும் பொருந்தும் என்று கூறினார். முன்னதாக வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று (மார்ச் 27) காலை 7 மணி முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் உள்ளிட்ட எந்த வழியிலும் வெளியிடக்கூடாது.

See also  அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021