இந்தியாவில் பட்டாசு உற்பத்திக்கு ‘சிவகாசி’ பெயர்போன இடமாக விளங்குகிறது. சிவகாசியை இந்தியாவின் ‘குட்டி ஜப்பான்’ என்று அழைப்பார்கள். இங்கு தயாரிக்கும் பட்டாசுகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் சிவகாசி உலகளவில் பிரபலமாக விளங்குகிறது. ஆனால் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு அலை வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விருநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 10 க்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை சிவகாசி அருகே காளையர்குறிச்சி பகுதியில் பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 14 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில், பலர் படுகாயமடைந்துள்ளதால், பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.