கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பதை பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே பள்ளிகளை திறக்க திட்டமிட்டார்கள்.

மேலும் பொதுதேர்வை நினைவில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழக அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க அவர்களின் பாடத்திட்டத்தில் 40 சதவீத அளவிற்கு குறைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9, 10, 11ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும்.

9, 10, 11ஆம் வகுப்புகளில் முழுமையான கற்றலை பெற்றால் தான் அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் எளிதாக பாடம் கற்க முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. அதன்படி, மே 3ஆம் தேதியில் இருந்து மே 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த உள்ளார்கள்.

தற்போது நீட் தேர்விற்கு அடிப்படையாக இருக்கும் வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய தேர்வுகளுக்கு விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி அரசு தேர்வுத்துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு அனுமதி(தத்கால்) திட்டத்தின் கீழ் மார்ச் 8 மற்றும் மார்ச் 9 ஆம் தேதி தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.