இந்தியாவில் ரேஷன் கார்டுகளின் பயன்பாடு மிகவும் ஆவசியமான தேவைகளில் ஒன்றாகும். பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி கணக்கான பேர் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 3 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளில் கருவிழி அடையாளம், கைரேகை பதிவு, ஆதார் எண் இணைக்காதது, கிராமப்புற மற்றும் ரிமோட் பகுதிகளில் இணையச் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுகுறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு மிகவும் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளது.

இதனால் ஜார்க்கண்ட், உ.பி, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பசியால் வாடி உயிரிழக்கும் சூழல் ஏற்படும். மத்திய அரசின் செயல்பாடு மிகவும் கொடூரமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்று நீதிபதிகள் கூறினார்.

உடனே மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, ஆதார் வேலிடிட்டி குறித்து கே புட்டசுவாமி வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை முறையாக அமல்படுத்தி வருகிறோம்.

ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கவில்லை என்ற காரணத்தினால் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளைத் தான் ரத்து செய்துள்ளோம். மனுதாரர் தவறான தகவல்களை கூறியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் 10 முதல் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.