கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், வீட்டிற்கு உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் முத்யால கட்டய்யா. இவரது மனைவி கிரிஜம்மா கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மே 12ஆம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் யாரும் தங்க அனுமதிக்கப்படாத நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு, மே 15ம் தேதி கிரிஜம்மாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அவரது கணவர், படுக்கையில் தன் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கார்.

அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டதற்கு, வேறு வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது பிணவறையில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். மனைவியை மருத்துவமனை முழுவதும் தேடி எங்கும் கிடைக்காததால், இறுதியாக பிணவறைக்கு சென்று இருக்கிறார். அங்கு, அவரது மனைவியைப் போன்ற ஒரு உடலை பார்த்து அடையாளம் காட்டிய அவரிடம், கிரிஜம்மா இறந்துவிட்டதை உறுதி செய்து, இறப்புச் சான்றிதழுடன் உடலையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

அடுத்த, சில தினங்களில் கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் (35) கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,அவருக்கு திடீரென மே 23-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ரமேஷின் மறைவைத் தொடர்ந்து தாய் -மகன் இருவருக்கும் சேர்த்து 10 நாட்களுக்கு பின்னர், அவர்களது வீட்டில் கிறிஸ்துவ முறைப்படி நினைவு கூட்டம் நடத்தியிருக்கின்றனர். அப்போது, அங்கு திடீரென கிரிஜம்மா உயிருடன் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள்.

மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வந்துள்ளதாக கிரிஜம்மா கூறிய பிறகு தான், அவர்கள் வேறொரு பெண் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தது தெரிய வந்தது. மேலும் தற்போது அடக்கம் செய்யப்பட்ட உடல் யார் என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பணியில் அலட்சியமாகச் செயல்பட்டு உறவினர்களிடம் சடலத்தை மாற்றி ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

See also  ரயில் சேவை குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்