கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தவறாமல் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். இவர்கள் குறிப்பிட்ட பாடத் தேர்வுகளை மட்டும் எழுத இயலாது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

See also  விராபின் வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த மத்திய அரசு அனுமதி