பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.

  • கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.
  • மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கின்றான். கோவலன் செல்வம் கரைகின்றது.
  • மாதவியோடு மனம் வேறுபடுகின்றான். மாதவியைப் பிரிந்து கண்ணகியை வந்தடைகின்றான். இழந்த பொருளை மறுபடியும் ஈட்ட நினைக்கிறான். கண்ணகி தன் காற்சிலம்புகளைக் கழற்றிக் கொடுக்கிறாள்.
  • கோவலன் இரவில் கண்ணகியை அழைத்துக் கொண்டு இழந்த பொருளை ஈட்டும் கருத்தோடு மதுரை செல்கிறான். மாதரி என்ற ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக்கிச் சிலம்பை விற்கக் கோவலன் நகருக்குச் செல்கிறான். அங்கு அரண்மனைப் பொற்கொல்லனிடம் சிலம்பைக் காட்டுகிறான். அப்பொற் கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன். அக்குற்றத்தை மறைக்க இதுதான் சமயம் என அவன் நினைக்கிறான். பொற்கொல்லன் அரண்மனைக்குப் போகிறான்.
  • அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆடல் மகளிர் கோலத்தில் அரசன் தன்னை மறந்தான் என்று கருதி அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் செல்கிறாள். அரசியைத் தேற்றுவதற்கு அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில் பொற்கொல்லன் அரசனைக் காண்கிறான். சிலம்பைத் திருடிய குற்றத்தைக் கோவலன் மீது சுமத்துகிறான்.அரசன் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.
  • இச்செய்தி கேட்ட கண்ணகி குமுறி எழுந்து பாண்டியன் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். முடிவில் உண்மையுணர்ந்த பாண்டியன் அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உயிர் விடுகிறான். அரசியும் அவனைத் தொடர்ந்து உயிர் பிரிகிறாள். கண்ணகி மதுரையைத் தீக்கு இரையாக்கச் செய்கிறாள். பின்பு சேர நாடடைந்து குன்றின் மேல் வேங்கை மர நிழலில் நிற்கிறாள்.
  • குன்றக் குறவர்களிடம் தான் உற்ற துன்பம் பற்றிக் கூறுகிறாள். பின்பு வானுலகோர் அவள் கணவனுடன் வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர். கண்ணகியின் இந்த வரலாறு செங்குட்டுவனிடம் கூறப்படுகிறது. செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான். இதுதான் சிலம்பின் கதை.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள்:-

  1. அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
  2. பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார்.
  3. ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்

என்பன ஆகும். இவற்றை உணர்த்தவே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.