கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணங்களையும் தற்போது கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சந்தித்தார். அப்போது இருந்து எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அது போலவே இன்று முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகி உள்ளார். இன்று பிற்பகல் கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அம்மாநில ஆளுநர் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ். எடியூரப்பா கூறியதாவது, முதலமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி என்றார்.

முதலமைச்சர் பதவியை 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தபடி, இப்போது நான் ராஜினாமா செய்துள்ளேன். பதவியில் இருந்து விலகும்படி எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. என் விருப்பப்படியே ராஜினாமா செய்துள்ளேன் என்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பா.ஜனதாவில் 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் பாஜக பி.எஸ். எடியூரப்பாவுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் பதவியை வழங்கியது. அப்போதே, 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமை எடியூரப்பாவிடம் கூறியிருந்தது. அதன்படி இன்று அவர் பதவி விலகியுள்ளார். இருப்பினும் புதிய முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் வரை எடியூரப்பா காபந்து முதலமைச்சராக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

See also  நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்