கர்நாடக மாநிலத்தில் KSRTC, NEKRTC, NWKRTC, BMTC என நான்கு போக்குவரத்து கழகங்கள் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி போக்குவரத்து கழகங்கள் நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் செய்தன. இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அனைத்து போக்குவரத்து கழகங்களும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து பேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், எங்களது முதன்மையான கோரிக்கையாக 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார்.

சம்பள உயர்வு குறித்து மாநில அரசிடம் பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அரசு உடனடியாக எங்களின் கோரிக்கையை ஏற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை தனியார் வாகன உரிமையாளர்களின் உதவியை நாடியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அரசு போக்குவரத்து துறை அதிகாரி வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எனவே தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒப்பந்த அடிப்படையில் மேக்ஸி கேப்கள், மினி பேருந்துகள், கேரேஜ்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்த நாட்களில் இயக்கப்படும். இதில் விருப்பமுள்ள தனியார் வாகன உரிமையாளர்கள் மண்டல போக்குவரத்து ஆணையத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம். உரிமையாளர்கள் விருப்பத்தின் படி எந்தவொரு வழித்தடத்திலும் தற்காலிக அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.

 

See also  ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது