கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள்
தங்களைத் தாங்களே கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுமார் ஓராண்டு காலமாக நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டப்படுத்த
பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக ஏறக்குறைய பல
மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுபாட்டுக்குள் வந்தது.தற்போது இயல்பு நிலைக்கும் மாறி வருகிறது.

இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம்,
பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த ஒரு வரமாக கொரோனா
பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்
கேரளா மற்றும் மகாராஷ்ரா மாநிலங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு
இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 74 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.மேலும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம்,பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வார சராசரியாக கொரோனா பாதிப்பு கேரளாவில் கடந்த நான்கு வாரங்களில் குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருக்கிறது. மகாராஷ்டிராவில் வார சராசரியாக கொரோனா பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கட்டாயம் ஒரு வாரம் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த ஏழு நாட்கள் தங்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துக் வரவேண்டும். இந்நாட்களில், காய்ச்சல், சளி, மூச்சுத்தினறல் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானநிலையத்தில் பரிசோதனை செய்யப்படுவார்கள்.அந்தப் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியும். அதன் பின்னர் அவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்.

2வது முறை கொரோனா பரிசோதனை முடிவும் நெகட்டிவ் என வந்தால் அவர்கள் அடுத்த 7 நாட்கள் தங்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு அறிவுறுத்தி அன்றாட வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஒருவேளை, 2வது முறை கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

See also  ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெறலாம்..!