வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு. “வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது” என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணனாரின் விளக்கம்.

மொழியியலும், வல்லினமும்

ஒலிப்பிறப்பு

தற்கால மொழியியலின்படி தமிழின் வல்லின எழுத்துகளில் “ற” தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் வெடிப்பொலிகள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. வாயறையின் ஓரிடத்தில் மூச்சுக்காற்று முழுவதும் தடை செய்யப்பட்டுப் பின்னர் திடீரென்று வெடிப்போடு வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே வெடிப்பொலிகள்.ஒற்றெழுத்தாக வரும்பொழுது “றகரம்” வெடிப்பொலியாக அமையும். இலங்கைத் தமிழிலும், தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இரட்டிக்கும்போதும் “றகரம்” வெடிப்பொலியாக வருகின்றது. வல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை

எழுத்துஅதிர்வுஒலிப்பு முறைஒலிப்பிடம்
ககரம்அதிர்விலாவெடிப்பொலிகடையண்ணம்
சகரம்அதிர்விலாவெடிப்பொலிஇடையண்ணம்
டகரம்அதிர்விலாவெடிப்பொலிநாமடி
தகரம்அதிர்விலாவெடிப்பொலிநாநுனி பல்
பகரம்அதிர்விலாவெடிப்பொலிஈரிதழ்
றகரம் (ஒற்று)அதிர்விலாவெடிப்பொலிஈரிதழ்
றகரம் (ஒற்றிலா)அதிர்விலாஆடொலி/ உருளொலிநாநுனி அண்பல்

வல்லொலி மெல்லொலி மாற்றம்

வல்லின எழுத்துகளில் “றகரம்” தவிர்ந்தவை தமிழில் எல்லா இடங்களிலும் வல்லொலியாக ஒலிக்கப்படுவது இல்லை. க், த், ப் என்பன, சொல்லுக்கு முதலில் வரும்போதும் (எகா: கடல், தட்டு, பத்து) இரட்டிக்கும் போதும் (எகா: பக்கம், முத்தம், அப்பம்) மட்டுமே இவை, வல்லொலிகளாக ஒலிக்கின்றன. “சகரம்” தற்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும்போது பெரும்பாலும் மெல்லொலியாகவே (எகா: சட்டி (satti), செக்கு (sekku)) ஒலிக்கப்படுகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் பேச்சு வழக்கில் சொல்லின் முதலில் வரும் “சகரம்” வல்லொலியாகவே (எகா: சட்டி (chatti), செக்கு (chekku)) ஒலிக்கப்படுகின்றது. இரட்டித்து வரும்போது சகரம் எப்போதும் வல்லொலியாகவே (எகா: பச்சை, அச்சம்) ஒலிக்கப்படும். “டகர”மும், “றகர”மும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இரட்டிக்கும்போது வல்லொலிகளையே தருகின்றன. “றகரம்” எல்லா இடங்களிலும் வல்லொலியே. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பிற இடங்களில் வரும் க, ச, ட, த, ப என்னும் வல்லெழுத்துகளைத் தமிழில் மெல்லொலிகளாக (எகா: அகம், தங்கம், பாசம், கொஞ்சம், பாடல், ஆண்டவன், காதல், சொந்தம், கோபம், இன்பம்) ஒலிப்பது வழக்கம்.

See also  Kudiyarasu thalaivargal-குடியரசு தலைவர்கள்

“வல்லொலி மெல்லொலி மாற்றம்” எனப்படும் இது தமிழில் தொன்று தொட்டே இருந்து வரும் வழக்கம் என்பது கால்டுவெல்லின் கருத்து. ஆனாலும், தொல்காப்பியத்தில் இது தொடர்பான குறிப்புகள் எதுவும் காணப்படாததாலும், இது போன்ற பல நுண்ணிய வேறுபாடுகளை எடுத்தாண்ட தொல்காப்பியர் இந்த விடயத்தைச் சொல்லாமல் விட்டிருப்பதாலும், தமிழில் மெல்லொலிகள் பிற்காலத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன எழுத்துகள்

தமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துகள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துகள் ஆகின்றன.

மெல்லினம்

மெல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. வல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புக்கள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ங், ஞ், ண், ந், ம், ன் எனும் ஆறு எழுத்துக்களையும் மெல்லின எழுத்துக்கள் என்கின்றன. இவை மெலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை மெலி, மென்மை, மென்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு. மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது” என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணனாரின் விளக்கம்.

மொழியியலும், மெல்லினமும்

ஒலிப்பிறப்பு

தற்கால மொழியியலின்படி தமிழின் மெல்லின எழுத்துக்கள் எல்லா இடங்களிலும் மூக்கொலிகள் அல்லது மூக்கினம் என்ற வகைக்குள் அடங்குகின்றன. ஒலிப்பு முயற்சியின்போது, அண்ணக்கடை திறந்து, வாயறையிலிருந்து மூச்சுக்காற்று மூக்கின் வழியாக வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே மூக்கொலிகள்.[3] மெல்லின எழுத்துக்களின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை

எழுத்துஅதிர்வுஒலிப்பு முறைஒலிப்பிடம்
“ங”கரம்அதிர்வுள்ளமூக்கொலிகடைநா இடையண்ணம்
“ஞ”கரம்அதிர்வுள்ளமூக்கொலிஇடைநா இடையண்ணம்
“ண”கரம்அதிர்வுள்ளமூக்கொலிநாமடி
“ந”கரம்அதிர்வுள்ளமூக்கொலிபல்
“ம”கரம்அதிர்வுள்ளமூக்கொலிஈரிதழ்
“ன”கரம்அதிர்வுள்ளமூக்கொலிநுனிநா

இன எழுத்துக்கள்

தமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துக்கள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துக்கள் ஆகின்றன.

இடையினம்

இடையினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. வல்லினம், மெல்லினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புக்கள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ய், ர், ல், வ், ழ், ள் எனும் ஆறு எழுத்துக்களையும் இடையின எழுத்துக்கள் என்கின்றன. இவை வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதால் இடையினம் எனப்படுகின்றன. இவற்றை இடை, இடைமை, இடைக்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.[1] “இடைநிகரவாகி ஒலித்தலாலும், இடை நிகர்த்தாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது” என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணனாரின் விளக்கம்

See also  நெய் பயன்கள் தமிழில்

மொழியியலும், இடையினமும்

ஒலிப்பிறப்பு

‘ய்’ என்ற மெய் அடி நா அடி அண்ணத்தைப் பொருந்துப் பிறக்கும். ‘ர்,ழ்’ அண்ணத்தை நுனி நா வருட பிறக்கும், மேல் அண்பல்லடி அண்ணத்தை நாவின் விளிம்பு வீங்கி ஒற்ற ‘ல்’ மெய்யும், வீங்கி வருட ‘ள்’ மெய்யும் பிறக்கும், ‘வ்’ மேற்பல்லானது கீழ் உதட்டினை வந்து பொருந்தப் பிறக்கும் என்பது தொல்காப்பியத்தின் விளக்கம்.[3] தற்கால மொழியியல் பெருமளவுக்குத் தொல்காப்பியரின் விளக்கத்துடன் ஒத்துப் போனாலும், சில வேறுபாடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாகத் தற்கால மொழியியலாளர் “ய”கரத்தின் ஒலிப்புக்கு இடைநாவின் உதவி தேவை என்று கூறுவதுடன், “ல”கார, “ள”காரங்களின் ஒலிப்பின்போது நாவிளிம்பு வீங்குதல் இல்லை என்றும் எடுத்துக்காட்டுகின்றனர்.

எழுத்துஅதிர்வுஒலிப்பு முறைஒலிப்பிடம்
“ய”கரம்அதிர்வுள்ளஅரையுயிர்இடையண்ணம்
“ர”கரம்அதிர்வுள்ளவருடொலிநுனிநா
“ல”கரம்அதிர்வுள்ளமருங்கொலிநுனிநா
“வ”கரம்அதிர்வுள்ளஅரையுயிர்இதழ்பல்
“ழ”கரம்அதிர்வுள்ளமருங்கொலிநாமடி-இடையண்ணம்
“ள”கரம்அதிர்வுள்ளமருங்கொலிநாமடி-வருடி

இன எழுத்துக்கள்

இடையின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்கள் கிடையா.