இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். மேலும் மாணவர்களின் உடல் நலமும், பாதுகாப்பும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்ப்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையில், அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்ட பின்னர், 2 நாட்களில் முடிவு எடுக்கலாம் என தெரிவித்து இருக்கிறார். மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு 2 நாட்களில் இது குறித்து முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனும், பாதுகாப்பும் முக்கியம். அதேபோல் மாணவர்களின் மதிப்பெண் முக்கியம் என்பதால், கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டும். சிலர், தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறார்கள். இதனால், தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் நீட் தேர்வு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 14417 என்ற தொலைபேசி எண்ணிலோ பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து கருத்துகளை கூறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

See also  அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்காக இன்று முதல் 200 பேருந்துகள் இயக்கம்