முன்னுரை
- இயற்கை என்பது இயல்பாகவே உருவானவை. இயற்கை வளங்களைப் பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகின்றது. இயற்கையின் கொடையான இயற்கை வளங்களைக் காப்பது ஒவ்வொரு தனிமனிதனதும் சமூகத்தினதும் தலையாய கடமையாகும்.
- உலகமானது இயற்கையான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களாலானது. இத்தகைய இயற்கையானது அளிக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை ஆகும். இயற்கையின் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இயற்கைச் சூழல்
- இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கைச் சூழலைக் காப்பது மிக அவசியமாகும்.
- வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும்.
இயற்கை வளங்களின் பயன்கள்
- இயற்கையில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மட்டுமன்றி பூமியைக் குடைந்து பெறும் வளங்களும் மிக முக்கியமானவையாகும்.
- வன வளங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு அதாவது உணவு மற்றும் உறைவிடம் போன்றவற்றிற்கு வழி வகை செய்வது மட்டுமல்லாமல், பூமியின் தட்பவெப்ப நிலை மற்றும் பருவ மழை ஆகியவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றது.
- காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பினைத் தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையையும் பாதுகாத்து மழை தரும் கடவுளாக உள்ளது.
- ஒரு நாட்டின் பொருளாதாரமே அதன் நீர்வளத்தை சார்ந்துள்ளது. உலக உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு ஒவ்வொரு இயற்கை வளங்களும் பல பயன்களை தருகின்றன.
இயற்கையைப் பாதுகாப்போம்
- இயற்கையைப் பாதுகாப்பதற்கு மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால் இயற்கை பாதுகாப்புடன் மனித தேவையும் பூர்த்தியாகும். ஒரு தனி நபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையை சிதைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.
இயற்கை மாசுபாடு
- இன்று மனித குலம் எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சனைகளில் இயற்கை மாசுபாடு முதன்மை வகிக்கின்றது. தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும், நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது.
- தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது.
- நெகிழி பாவனைகளின் அதிகரிப்பினால் மண்வளம் மாசடைகின்றது. இதனால் விவசாய நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகின்றன.
முடிவுரை
- ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கையானது இயற்கையைச் சார்ந்தே உள்ளது. இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலை மாறி தற்போது இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி நகரங்களில் பல்வேறு மாசுகளுக்கு இடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகி உள்ளது.