நடிகர் விவேக்கின் வாழ்க்கை வரலாற்றை சற்று திருப்பிப் பார்ப்போம்

நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல், 17) காலை 4.35 மணிஅளவில் உயிர் இழந்தார். இவருடைய மரணம் சினிமா திரையுலகத்திற்கும், இவருடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். இவருடைய மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சினிமாவில் அனைவராலும் பாசத்தோடும், அன்போடும் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா – மணியம்மாள் தம்பதியாருக்கு மகனாக பிறந்தார். இவருடைய பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார்.

சினிமா உலகிற்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்தவர். பிறகு சென்னைக்கு வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வு எழுதினார். இந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு தலைமைச் செயலகத்தில் இளங்கலை உதவியாளராக பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே மெட்ராஸ் ஹ்யூமர் கிளப்பில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார்.

சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தர் மூலம் அறிமுகம்

இந்த மெட்ராஸ் ஹ்யூமர் கிளப்பின் நிறுவனம் பி.ஆர்.கோவிந்தராஜனுக்கு சொந்தமானது. இவர் மூலம் தான் நடிகர் விவேக் இயக்குநர் கே.பாலசந்தருக்கு அறிமுகம் ஆனார். இதன்முலம் 1987ஆம் ஆண்டு வெளிவந்த “மனதில் உறுதி வேண்டும்” திரைப்டத்தில் ஸ்கிரிப்ட் உதவியாளராக இருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகி சுஹாசினியின் சகோதரனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்று, இயக்குநர் கே.பாலசந்தரால் ஒரு நடிகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் மூலம் பாலசந்தர் இயக்கத்தில் ஒரு வீடு இரு வாசல், புது புது அர்த்தங்கள் ஆகிய படங்களிலும், பிற இயக்குநர்கள் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மனி, நண்பர்கள், இதயவாசல், புத்தம் புது பயணம்” என பல படங்களின் நடித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “வீரா, உழைப்பாளி” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலும் நண்பர்களில் ஒருவராக வரும் கதாபாத்திரமாகவே இவரது கதாபாத்திரம் அமைந்து இருக்கும். ஒரு தனி நகைச்சுவை நடிகனாக தன்னை அடையாளம் காட்ட நடிகர் விவேக்கிற்கு கணிசமான காலம் தேவைப்பட்டது என்று கூறலாம்.

90க்கு பிறகு வெளிவந்த “காதல் மன்னன்”, “உன்னைத்தேடி’, வாலி போன்ற அஜித் படங்களிலும், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த “கண்ணெதிரே தோன்றினாள்”, “பூமகள் ஊhவலம்”, “ஆசையில் ஓர் கடிதம்” போன்ற படங்களில் நாயகனின் நண்பனாக வந்து நகைச்சுவையில் தனி முத்திரை பதித்து இருக்கிறார்.

பிறகு வந்த “குஷி”, “மின்னலே”,”டும் டும் டும்”, ரன், “தூள்”, “சாமி”, “பார்த்திபன் கனவு” ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத தனிப் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

நடிகர் விவேக் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நான்தான் பாலா, வெள்ளை பூக்கள் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்து இருக்கிறார். இவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் கூறியிருக்கிறார். மேலும் இந்த நகைச்சுவை மூலம் தனது ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு சீர்திருத்தக் கருத்துக்களை துணிவோடு எடுத்து கூறியவர் நடிகர் விவேக்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஜாதி மத வேறுபாட்டிற்கு எதிராகவும், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் அவலங்களையும், தண்ணீர் பிரச்னை, இயற்கை சீரழிவு, லஞ்ச லாவண்யங்களுக்கு எதிராகவும், அரசியலில் நிலவும் ஊழலையும் தனது நகைச்சுவை நடிப்பில் வசனங்களாக உதிர்த்து திரைமொழியால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மரக்கன்று நடுவதில் ஆர்வம்

நடிகர் விவேக் சினிமாவில் தான் பேசி நடித்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை சினிமாவோடு விட்டு விடாமல் தனது நிஜ வாழ்விலும் செயல்படுத்தி வந்தார். உதாரணத்திற்கு மரக்கன்று நடுதல். நாட்டின் வறட்சிக்கு முக்கிய காரணம் மழையின்மை தான். மழைவராமல் இருப்பதற்கு காரணம் மரங்களின் அழிவு தான் என்று கூறினார்.

மரங்களின் அழிவுக்கு காரணம் மனிதர்கள் தான் என்று கூறி செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்ற கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என கூறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்று நடுவதில் ஆர்வம் காட்டி வருவதோடு பிறருக்கு ஓரு வழிகாட்டியாகவும் வாழ்ந்தவர் நடிகர் விவேக்.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் பிரசன்ன குமார் இறந்துவிட்டார். மகன் மறைவு நடிகர் விவேக்கிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சமையத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதனால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை.

பிறகு இதிலிருந்து மீண்டு படங்களில் நடிக்க தொடங்கினார். நடிகர் விவேக்கிற்கு மனைவி அருள்செல்வியும் , மகள் தேஜஸ்வினியும் உள்ளனர். நடிகர் விவேக், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீது அளவுக்கு அதிகமாக அன்பு கொண்டு இருந்தார்.

அப்துல் கலாமினை முன்மாதிரியாக கொண்டு தன் வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றிக் கொண்டார். இதோடு இல்லாமல் அப்துல் கலாமின் ‘பசுமை இந்தியா’ திட்டத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்வதற்கு விவேக் முக்கிய பங்கு வகித்தார். நடிகர் விவேக், எந்த மேடையில் பேசினாலும் அப்துல் கலாமை நினைவுக்கூறாமல் இருக்கமாட்டார். அந்த அளவுக்கு அவர் மீது பற்று வைத்திருந்தார்.

மேலும் இவரால் பேசப்பட்ட வசனங்கள் “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”, “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” “கோபால், கோபால்”, ஆகியவை ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றைக்கும் நிலையான இடத்தை பிடித்திருக்கிறது.

 

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…