கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டானது அதிக அளவில் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி உள்ளது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2021 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 515 மருத்துவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்திய ஆய்வில், ஒரு மருத்துவருக்கு கூட பெரிய அளவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இரண்டு தடுப்பூசிககளை இரண்டு முறை செலுத்தி கொண்ட பிறகு, அவர்களின் உடலில் 95 % செரோபோசிட்டிவிட்டி இருப்பதைக் ஆய்வில் கண்டறிந்து இருக்கிறார்கள். செரோபோசிட்டிவிட்டி என்பது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியைக் குறிக்கிறது.

குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவரை விட கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டோரின் உடலில் 10 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி உள்ளது என்பது மருத்துவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், கோவாக்சின் தடுப்பூசியை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் உடலில் 6 மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கொல்கத்தாவின் ஜி.டி. மருத்துவமனை மற்றும் நீரிழிவு நிறுவனத்தின் ஆலோசகர் உட்சுரப்பியல் நிபுணருமான அவதேஷ் குமார் சிங் இது குறித்து கூறுகையில், “கோவிஷீல்டு தடுப்பூசியானது அதிக எதிர்ப்பு ஸ்பைக் ஆன்டிபாடிகள் மற்றும் அதிக செரோபோசிட்டிவிட்டி வீதத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. 3 வது கட்ட சோதனை முடிவு இன்னும் வெளியாக வில்லை.

கோவாக்சின் தடுப்பூசியும் நல்ல பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்பதைக் காட்ட சில உண்மையான உலகளவிலான ஆதாரங்களையும் நாங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்”, என்று தெரிவித்து இருக்கிறார்.

See also  தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி