தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் கற்றுக் கொள்ளலாம்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது லேட்டாப் போன்ற வசதிகள் இல்லாததால் ஆன்லைன் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனால், தற்போது நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்‌ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் பட்டியல் கிடைத்த உடன், மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் போன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

See also  ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை