கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு மிக அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என மாறுபாடு அடைந்து வருகிறது.

இந்த டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது ஆகும். இது ஏற்கெனவே கண்ட றியப்பட்ட வைரசை விட அதிகவேகமாக பரவும் திறன் வாய்ந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போதுடெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த தொற்றுகள், அரசுகளை கவலை அடைய வைத்துள்ளது. குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு காரணமாகி விடும் என்றும் அஞ்சப்படுகிறது.

தற்போது உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 10 மாநிலங்களில் 48 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 9 பேரிடம் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா ப்ளஸ் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது டெல்டா வகை வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு, மிக அதிககமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். டெல்டா வகை வைரஸ் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப்படாத மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.