இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் மாணவர்களின் பொதுத் தேர்வுகள் எதுவும் இன்றி ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்தமாதம் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதேசமயம் மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். ‛‛டெல்லியில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத உள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்கள்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்வு அமைந்துவிடும். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இளைஞர்களை தான் அதிக அளவில் தாக்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யணும் என்ற கோரிக்கை சமூகவலைதளமான டுவிட்டரிலும் பரவி வருகிறது. பல லட்சம் பேர் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதனால் டுவிட்டரில் #CBSE, #DelhiCM, #cancelboardexams2021 உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகியுள்ளது.