கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஓராண்டாக நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை; மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் ஓரளவு குறைந்து வந்ததால், இந்தாண்டு ஜனவரி19 முதல், மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடியாக வகுப்புகள் நடந்து வந்தது.ஆனால், பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மாணவ – மாணவியர் கடைப்பிடிக்க தவறியதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுதும் பல இடங்களில், பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களை தவிர, மக்கள் கூடும் மற்ற இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுதும் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் வரும், ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க உள்ளதால், மாநிலம் முழுதும், அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. கூட்டங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரப்படுத்தி உள்ளது.இதன்படி, 9,10 மற்றும் 11 வரையிலான வகுப்புகளுக்கு, மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்த தமிழக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவித்து உள்ளார்.பொது தேர்வுகள், மே 3 முதல் நடத்தப் படுவதால், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லுாரிகளுக்கும் விடுமுறையை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணம் மட்டுமல்லாமல், கல்லுாரிகளில் தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட உள்ளது. இந்த பணிகளையும் தேர்தல் துறை மேற்கொள்ள உள்ளதால் கல்லுாரிகளில் வழக்கமான வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லுாரிகளுக்கு தினமும் வரும் மாணவர்களின் சதவீதம்; கொரோனா தொற்று பாதித்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை; முடிக்க வேண்டிய பாடங்களின் அளவு, ஓட்டுச்சாவடி அமைக்க உள்ள கல்லுாரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உயர் கல்வி துறை சேகரித்துள்ளது. இதையடுத்து, வரும், 29ம் தேதி முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு விடுமுறை அளிக்க, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியிடப்படும் என் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.