விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும் நடந்தது. போலீசார்  தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை  விரட்டியடித்தனர்.

மேலும்  டெல்லியில்  பதற்றமான சூழல் உருவாகியது. டெல்லியில் சில இடங்களில் தற்காலிகமாக இணைய சேவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. டெல்லியில் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், விவசாயிகளின் கொடியை ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில்  83 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து  டெல்லி போலீசார் 15 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதில் கிழக்கு மண்டலத்தில் 5 முதல்தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங்  டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கதல்ல என்றும் இந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்தார். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும்  விவசாயிகள் நல்லெண்ணம் கொண்டவர்களே ஆனால் இந்த போராட்டம் அதை மறுக்கிறது.  விவசாயிகள் அனைவரும்  டெல்லியை விட்டு வெளியேறி அவர்களுடைய எல்லைகளுக்கு திரும்ப வேண்டும்  என்றும்  அவர் தெரிவித்தார்.

Categorized in:

செய்திகள்,

Last Update: January 27, 2021

Tagged in:

, ,