அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதால், அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 25.50 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், 2021 தேர்தல் வேட்புமனுவில் ரூ.8.62 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதன் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாகவும், 55% அதிகம் சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
											 
											 
											 
											 
											