செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த ரோவர் ரோபோட் வடிவமைக்கப்பட்டது.

இந்த கிரகத்தில் உள்ள மிக பெரிய பிரமாண்டமான பள்ளத்தாக்குகளில் இந்த ரோபோட் தனது ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தற்போது ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய ஏரியாக இருந்தது என சொல்லப்படுகிறது. தற்போது நீரின்றி காணப்படும் இந்த சிவப்பு கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக நீரோட்டத்துடன் இருந்திருக்கிறது.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஐந்து மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும். மேலும் செவ்வாய் கிரகம் குறித்த பல புதிய தகவல்களையும் ரோவர் நமக்களிக்கும் என நம்பப்படுகிறது. மாதிரிகளை சேகரிப்பதற்க்காக ரோவரில் துளையிடும் வகையில் 7 அடி நீள கருவி பொருத்தப்பட்டுள்ளது.

வரும் 2031-ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டு இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இருப்பதால், கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோபோட்டிக் ரோவருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தும்.