நாடு முழுதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மெஷின்கள் இருக்கிறது. இதில் பல ஏ.டி.எம்., மெஷின்களில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.யையும் தேடி அலைந்து அவஸ்தைப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றது. அதுவே நமக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். நம்முடைய அவசர தேவைக்கு ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகள் நமக்கு பணம் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உரிய நேரத்தில் ஏ.டி.எம்., மெஷினில் பணம் நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

ஒரு ஏ.டி.எம்.,மெஷினில் தொடர்ச்சியாக 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஏ.டி.எம்.,மின் வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகள் மூலம் வங்கிகள் தங்களின் நெட்வொர்க் மற்றும் சிஸ்டத்தை முறையாக பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் தனி கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வங்கிகள் ஏடிஎம்களின் செயலிழப்பு குறித்து கணினி உருவாக்கிய அறிக்கையை ரிசர்வ் வங்கியின் ‘இஸ்யூ துறைக்கு’ வங்கிகள் வழங்குகின்றன. WLAO (ஒயிட் லேபிள் ஏடிஎம்கள்)-களைப் பொறுத்தவரையில், அந்த ஏ.டி.எம்மின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வங்கிகள் இந்த அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் வங்கிகள் ஒவ்வொரு மாதத்திற்கான அறிக்கையையும் அடுத்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் வெளியிட வேண்டும். அதாவது வரும் அக்டோபர் மாதத்தின் அறிக்கையை நவம்பர் 5ஆம் தேதிகுள் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

See also  இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவில் குளறுபடி; மறுமதிப்பீடு செய்ய திட்டம் - அண்ணா பல்கலைக்கழகம்