இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்(PMJD). இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. மாநில அரசுத் திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகிறது.

இந்த ஜன் தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களிடமிருந்து வங்கிகள் அளவுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஜன் தன் யோஜனா வங்கி கணக்கில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். SBI உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இதற்காக ரூ.20 வரையில் கட்டணம் வசூலிக்கின்றன.

பாம்பே ஐஐடி ஆசிரியர் ஆசிஷ் தாஸ் மேற்கொண்ட ஆய்வுப்படி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), கடந்த ஆறு வருடங்களில் மட்டும் வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.308 கோடி கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. 2015ஆம் நிதியாண்டில் ரூ.4.7 கோடி, 2016ஆம் நிதியாண்டில் ரூ.12.4 கோடி, 2017ஆம் நிதியாண்டில் ரூ.26.3 கோடி, 2018ஆம் நிதியாண்டில் 34.7 கோடி, 2019ஆம் நிதியாண்டில் ரூ.72 கோடி, 2020ஆம் நிதியாண்டில் ரூ.158 கோடி என்ற அளவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்துள்ளது.

ஆசிஷ் தாஸ் ஏழை எளிய மக்களிடம் இவ்வளவு கட்டணம் வசூலிப்பது முறையல்ல என்று கூறுகிறார். 2015-2020 காலகட்டத்தில் அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் மட்டும் ரூ.12 கோடி கட்டணம் வசூலித்திருப்பது அர்த்தமற்ற செயல் என்று சுட்டிக் காட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களிடம் ரூ.9.9 கோடி கட்டணம் வசூல் செய்துள்ளது.

See also  TNPL கிரிக்கெட் தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது