டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை தேசமே கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், ஸ்பெஷல் ஜெர்ஸியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். இவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை, கிரேட் 1ல் அரசு வேலை, இலவசமாக பயணிக்க கோல்டன் பாஸ் என பரிசுகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த நினைவாக 8758 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்ஸியையும் வழங்க உள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், ‘நீரஜ் சோப்ராவின் சிறப்பான வரலாற்றுச் சாதனையை நினைவு கூறும் வகையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் சார்பிலும், நாட்டின் பெருமளவு மக்களால் விரும்பப்படும் அணி சார்பிலும், லெப்டினென்ட் கர்னல் எம்.எஸ்.தோனி தன்னுடைய வாழ்த்துகளை நீரஜ் சோப்ராவுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சாதனையை கவுரவிக்கும் வகையில் சிஎஸ்கே அணி நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

csk team

சிஎஸ்கே அணியின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ‘ டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் சாதனையால் இந்தியர்களாகிய நாம் பெருமைப்படுகிறோம். சோப்ராவின் சாதனை லட்சக்கணக்கான இளைஞர்களை விளையாட்டுக்கு வரவழைக்கும். இவருடைய சாதனை எந்த விளையாட்டிலும் உச்சத்துக்கு செல்ல தூண்டுதலாக இருக்கும்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்ற சோப்ராவின் முயற்சி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த தன் நினைவாக 8758 என்ற எண் அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்ஸியை சிஎஸ்கே நிர்வாகம் சோப்ராவுக்கு வழங்க உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதங்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் இருந்து 48-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

See also  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!