தமிழக சட்டசபையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (3வது தடுப்பூசி) போடுவது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர், ‘கொரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன?,’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியதாவது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை தடையின்றி வழங்கி வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் ஏதோ ஒரு சிலருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவீதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று கூறினார்.

 

See also  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது - தமிழக அரசு திட்டவட்டம்