யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மண்டேலா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகி பாபு இருக்கிறார். யோகி பாபு நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 30 படங்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், யோகி பாபு நடிப்பில் 9 படங்கள் மட்டுமே வெளியாகின. அண்மையில், யோகி பாபு நடிப்பில் டிரிப் என்ற படம் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

தற்போது யோகி பாபு கிட்டத்தட்ட 20 படங்கள் வரை கைவசம் வைத்திருக்கிறார். இதில், மண்டேலா படமும் உள்ளது. புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மண்டேலா படத்தை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்து உள்ளார்.

தற்போது வெளியான மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், மண்டேலா டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக, பாஜக,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த சூழலில் அரசியல் வசனம் மற்றும் ஊராட்சி தேர்தலை மையப்படுத்தி வெளியாகியுள்ள மண்டேலா பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீடு வீடாக சென்று 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது, நோட்டாவைப் பார்த்து 3 ஆவது கட்சி இருக்கிறது என்று புரிந்து கொள்வது, வெளிநாட்டிலிருந்து ஓட்டு போடுவதற்கு ஆட்களை வரவழைப்பது என்று அரசியல் களத்தை பற்றி பரபரப்பாக காட்டுகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தன்னை வெற்றி பெற வைத்தால் வீடுதோறும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20 டோக்கனுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறி டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றார் என்று கூறப்பட்டது.

தற்போது, அவரை விமர்சிக்கும் வகையில், இந்த மண்டேலா டீசர் அமைந்துள்ளது என்று கூறுகிறார்கள்.

இதேப்போல் விஜய்யின் சர்கார் படத்தையும் விமர்சிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஓட்டு போட வரும் விஜய்யின் வாக்கை வேறு யாரோ கள்ள ஓட்டு போட அதற்கு பிறகு நீதிமன்றம் சென்று தனது வாக்கை விஜய் போடுவார்.

இது போல், நெல்சன் மண்டேலா என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து ஓட்டு போட வரும் யோகி பாபு மீது தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

எனினும், அவர் அடையாள அட்டையை காண்பிக்கிறார், பிறகும் சந்தேகம் எழுகிறது. இறுதியாக ஒரு கட்டத்தில் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க செல்கிறார்.

அங்கு, யோகி பாபு இரு வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்குக்கிறார்.அடுத்து நோட்டாவைப் பார்த்து, 3ஆவது வேட்பாளர் இருப்பதாக நினைத்துக் கொண்டு யாராக இருந்தாலும் காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவேன் என்று செல்கிறார்.

ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படியொரு அரசியல் டீசர் தேவைதானது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

மண்டேலா படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ஜிஎம் சுந்தர், சங்கிலி முருகன்,திரௌபதி நடிகை வ்ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

Categorized in: