ஜெட் வேகத்தில் அமெரிக்க அதிபர் – பதவியேற்ற முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்து இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு அமெரிக்க பதவியேற்ற பைடன் முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் பதவியேற்ற அதிபர்களில் டிரம்ப் முதல் நாளில் 8 உத்தரவுகளிலும் ஒபாமா 9 உத்தரவுகளிலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும் கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

முதல் முறையாக 15 ஆணைகளில் கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேருவதற்கான நடைமுறையை தொடங்க ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். புதிய அமெரிக்க நிர்வாகத்தில் முன்னுரிமைகளில் பருவநிலை மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க மக்களிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய அலுவலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சில முஸ்லீம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத்தடைகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மெக்சிகோ – அமெரிக்கா இடையே தடுப்பு சுவர் காட்டும் பணிக்கு நிதி அளிக்கும் வகையில் டிரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவை பைடன் திரும்ப பெற்றார். பாலின சமத்துவம், இனப்பாகுபாடு தொடர்பான சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற ட்ரம்பின் நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை ஐ.நா. தலைமைச் செயலாளர் வரவேற்றுள்ளார். மேலும் இது போன்ற பல்வேறு ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.