தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்த பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமிக்கப்பட்டதை அடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் “பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்” என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்ற பெயரிலிருந்து ஐயர் என்பதை நிக்கி உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் எனவும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் என்றும் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் சட்டமான, `தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது’ என்ற அறிவிப்பின்படியே இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படிக்கும் வயதிலேயே மாணவர்களுக்கு சாதி ரீதியான தகவல்கள் குறித்து தெரியக் கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.