புதுசேரியில் 100 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

சுமார் 100 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய் தொற்று குறைந்திருப்பதால் புதுச்சேரியில் உள்ள 12 திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்றாலும் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. எனினும் புதிய படங்கள் வெளியாகாததால் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்கள் மற்றும் டப்பிங் திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன.

இதனால் ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. எனினும் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை கைகளை தட்டி ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனிடையே புதுச்சேரி அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.