விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 % மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு உண்டு என்ற அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்த பணம் ரூ.1000-யை தலைமை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

See also  இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கலாம் - தலைமை செயலாளர் உத்தரவு