இன்றைய சூழலில் கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். தடுப்பூசி குறித்து நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி, தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், குழப்பங்களும் விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி பார்ப்போம்.

தற்போது என்னென்ன வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன? அவற்றுக்கிடையே என்ன வேறுபாடு?

கோவிஷீல்டு, கோவேக்சின், ஃபைசர், மாடர்னா போன்ற பல தடுப்பூசிகள் உள்ளன. இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதத்தில் வேறுபடுகின்றன.

உதாரணத்துக்கு, கோவிஷீல்டு மனிதக் குரங்குக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. கோவேக்சின் செயலற்ற நிலையில் உள்ள முழு வைரஸையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஃபைசர் mRNA தொழிலநுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தடுப்பு மருந்துகளில் வைரஸின் புரத நீட்சி பயன்படுத்துகிறது.

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது?

கொரோனா தடுப்பூசியை அனைவருமே போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எந்த வயதினருக்கு ஏற்றதா என்று, பல்வேறு கட்டங்களிலும் பரிசோதனை செய்து தான் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

அதிக அளவு ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் கடுமையான உடல் பாதிப்புகள் உள்ளவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?

சாப்பிடக் கூடாத உணவு எதுவும் இல்லை. அறிவியல் பூர்வமாக தடுப்பூசிக்கும் உணவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் ஏதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நேரத்தில் நம்முடைய உடலின் நோய்த் தடுப்பு அமைப்பானது எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் சாதாரணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்து தடுப்பூசி போட்டால், நோய்த் தடுப்பாற்றல் நம் உடலில் அதிகரிக்கும். இல்லையென்றால் நோய்த் தடுப்பாற்றலின் அளவு குறைவாக இருக்கும்.

மேலும் நாம் வழக்கமாக உண்ணும் உணவின் மூலம் நோய்த் தடுப்பாற்றலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் தடுப்பாற்றலைக் குறைக்கும் வகையில் எந்த மருந்துகளையும் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மதுவால் தடுப்பாற்றலில் பாதிப்பு ஏற்படும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு ஆல்கஹால் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தடுப்பூசி அனைவருக்கும் ஒரே அளவு தடுப்பாற்றலைக் கொடுக்குமா?

தடுப்பூசி அனைவருக்கும் ஒரே அளவு தடுப்பாற்றலைக் கொடுப்பதில்லை. இதற்கு காரணம், தடுப்பூசிகள் மூலம் உருவாகும் தடுப்பாற்றல் ஒவ்வொரு மனிதரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாவே சாதாரண அளவில் இருந்தால், அதை தடுப்பூசி மூலம் அதிகரிக்கலாம். இயற்கையாக நம் உடலில் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவாக இருந்தால், அதை தடுப்பூசி மூலம் போதுமான அளவுக்கு அதிகரிக்க முடியாது.

இதுவரை தயாரிக்கப்பட்டிள்ள தடுப்பூசிகளில் எது சிறந்தது?

உலகில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து தடுப்பூசிகளுமே பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தான் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் இதுதான் சிறந்தது என்று ஏதுவும் இல்லை. தடுப்பூசிகள் அவற்றின் தடுப்பாற்றலின் அளவில் மட்டும் சற்று மாறுபடக்கூடும். ஆனால் ஒவ்வொரு தடுப்பூசியும் தனித்தன்மை கொண்டிருக்கும்.

இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கிடைக்கும் தடுப்பூசியை உரிய நேரத்தில் போட்டுக் கொள்வது மிகவும் சிறந்தது. வேறொரு தடுப்பூசி வரும் என்று காத்திருப்பது கொரோனா தொற்றும் அபாயத்தை அதிகரிக்க கூடும்.

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாலானோருக்கு காய்ச்சல் வரும். இவ்வாறு காய்ச்சல் வந்தால் தான் தடுப்பூசி நமது உடலில் செயல்படத் தொடங்கியிருக்கிறது என்று அர்த்தம். அது நல்லது தான். இந்த காய்ச்சல் அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் படிப்படியாகக் குறைய வேண்டும். அதையும் தாண்டி காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல் ஊசி போட்ட இடத்தில் அரிப்பு, கொப்புளம் ஏற்பட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

ஒருவர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை நிர்ணயிக்கப்பட்ட வகையில் எடுத்துக் கொண்டால், அவரது உடலில் குறிப்பிட்ட காலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி விடும். இதனால் அவருக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறலாம். அவரது உடலுக்குள் கொரோனா வைரஸ் நுழையவே முடியாது என்று இருக்கும்போது அவரால் பிறருக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பும் இல்லை.

இருப்பினும் தடுப்பூசி மூலமாக எல்லோருக்கும் ஒரே அளவு எதிர்ப்பாற்றல் உருவாகுவது இல்லை. தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் சிலருக்கு எதிர்ப்பாற்றல் போதுமான அளவுக்கு இருக்காது. இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், அவர்களது உடலின் இயற்கையான எதிர்ப்பாற்றலில் உள்ள குறைபாடு தான். சில நேரங்களில் வைரஸில் உருவாகும் புதிய திரிபுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா?

தடுப்பூசி அனைத்து வயதினருக்குமே அவசியம் தான். 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இதுவரை கொரோனாவுக்கு எதிரான எந்தத் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவில் மட்டும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது பெரியவர்களுக்கு போடும் அளவு மருந்தை குழந்தைகளின் உடலில் செலுத்த முடியுமா, அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் வந்த பிறகுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.