ஹைலைட்ஸ்:

  • சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
  • மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை காக்க, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்த ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழக்கிறார்கள்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக 2018-19ம் ஆண்டுகளில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் ஃபிட்டர் பயிற்சி முடித்து, தற்போது வேலையில் இல்லாத நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு ஐடிஐ பணியமர்த்தும் அலுவலர் ரமேஷ்குமார் இதைபற்றி கூறும்போது, “ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க, தொழில்நுட்ப உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். 2018-19-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐ-களில் ஃபிட்டர் பயிற்சியை நிறைவு செய்து, வேலையில் இல்லாத நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அரசு சார்பில் பயிற்சியாளர்களின் விவரங்களை கேட்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை அறிய 9442178340, 9095905006 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். இது முழுக்க முழுக்க அரசு வேலை என்பது குறிப்பிடத்தக்கது ” என்றார்.