இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். வயதான காலத்துக்கு பிறகு வரவேண்டிய மூட்டு வலி இப்போது இளவயதிலேயே வந்து நம்மை பயமுறுத்துகிறது.

நம் உடலில் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையும் உறுதியாக இருந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாது. முன்பெல்லாம் 90 வயதுவரை மூட்டுவலி உபாதையை அனுபவிக்காத தலைமுறையினர் எலும்பை பலப்படுத்தும் வகையில் உணவுகளை எடுத்துகொண்டார்கள். அந்த உணவு வகையில் முடக்கத்தான் கீரையும் ஒன்று. முடக்கத்தான் கீரையின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டும் தன்மையை கொண்டுள்ளது முடக்கறுத்தான் கீரை. இது உடலில் ஏற்படும் வாதக்கோளாறுகளை சரி செய்கிறது. அதனால் தான் இதை முடக்கத்தான் என்கிறோம். இதில் வைட்டமின்களும், தாதுப்புகளும் அதிகளவு உள்ளது.

மூட்டுவலிக்கு முடக்கத்தான்

பொதுவாக உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க முடக்கத்தான் கீரை மிகவும் உதவுகிறது. நம் உடலில் உள்ள மூட்டுகள்,எலும்பு, தசைகளின் வலிமையை வாதமே நிர்ணயிக்கிறது. முடக்கத்தான் வாத நோய்க்கு நிரந்தர தீர்வை தரும் என்பது முன்னோர்கள் கருத்து . அதன்படி இன்றும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வை நாம் பெறலாம்.

​மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் கீரையின் இலையை மைய அரைத்து கால் முட்டியில் வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் வீக்கம் குறையும். ​மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும். மூட்டுகளில் வலி உணர்வு ஏற்பட்டால் தினமும் அருந்தும் டீ, காபி பானங்களை தவிர்த்து, ஒரு கப் முடக்கத்தான் சூப் குடிக்கலாம்.

முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும். மேலும் இது மூட்டுகளில் அதிகளவில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் உருவாகும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை வலிமையாக்கும்.

ருமட்டாய்டு பிரச்சனை

காலையில் எழுந்ததும் சிலருக்கு பாதம், கை, இடுப்பு, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி தொடர்ந்து இருந்தால் அவை தீவிரமாகி ருமட்டாய்டு ஆக மாறிவிடுகிறது. இந்த ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் இருப்பவர்கள் உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

See also  தட்டைப்பயிறு நன்மைகள் தமிழில்

முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக செய்து சாப்பிட்டால் சிறிதும் கசப்பு தெரியாது. மாத்திரைகளால் மூட்டுவலியின் வீரியம் தற்காலிகமாக குறையும். ஆனால் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வலியை நிரந்தரமாக குறைக்கலாம். ​மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.

முடக்கத்தான் கீரையின் துவையலை தொடர்ந்து உணவில் எடுத்து கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்த கீரையை ஆரம்பத்தில் சாப்பிடும்போது, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு பேதியாகும். இவர்கள் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.