தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் பாதிப்புகள் பெரியளவில் இல்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 6,7மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 8 ஆம் தேதி 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கப்பட்டது. விடுதிகளும் திறக்க்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தலாம் என்றும் இரண்டு பகுதிகளாக பிரித்து ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் கல்வித்துறை ஆலோசனை வழங்கியது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா என்று ஆசிரியர்கள் கண்கணித்து வருகின்றனர். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது சாத்தியமாகி உள்ளதால் அடுத்தகட்டமாக 6,7,8 வகுப்புகள் பிப்ரவரி மாதம் இறுதியில் வகுப்புகள் திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.