தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் தொழிநுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் நடைப்பெறும் என்ற குழப்பம் நீட்டித்து வந்தது. இந்நிலையில் தற்போது 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று(ஜூன் 14) முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு மாணவர்சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் இன்று 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறவில்லை. தொற்று பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் இருக்காது. மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும். மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துப் பாடம் நடத்துவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை” என கூறியுள்ளார்.