தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளில் நாளை அனுமதிக்கப்படமாட்டார்கள். தடுப்பூசி போடாமல் ஆசிரியர்கள் இருந்தால், அந்த பள்ளிகள் திறக்கப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் திருப்திகரமாக செய்யப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டாயம் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். ஒருவேளை அவர்களின் முகக் கவசங்கள் கிழிந்து விட்டாலோ அல்லது மறதியில் முகக்கவசம் அணியாமல் வந்தாலோ அவர்களுக்கு பள்ளியிலேயே முகக்கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கொடுக்க முன் வரவேண்டும் என்று முதல்வர் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிகளின் வகுப்பறைகளை கட்டாயம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து வகுப்புகள் மட்டுமே நடைபெறும். காலை 9:30 மணிக்கு தொடங்கப்படும் பள்ளி வகுப்புகள், மாலை 3:30 மணிக்குள் அனைத்து வகுப்புகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளி வகுப்பு நேரத்தில் விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட மாட்டாது. நாளை பள்ளி திறப்பு குறித்து பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயமில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எங்களுடைய (தமிழக அரசின்) கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

See also  Galaxy’s Edge the best thing about it visitors just.