கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் முதலமைச்சர்களிடம் கேட்டு அறிகிறார். கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றத் தவறினால் மூன்றாவது அலை தாக்கம் ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் கடந்த செவ்வாய் அன்று பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச இளையோர் திறன் தினத்தையொட்டி காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திறன் மேம்பாடு சுயசார்பு இந்தியா இயக்கத்தின் அடிப்படை அம்சம் என்று கூறினார். திறன் மேம்பாடு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சமுதாயத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் கேட்டு கொண்டார்.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 25 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை இந்திய அடிப்படை செயல் திட்டமாக கொண்டுள்ளதால் துடிப்பான திறன்மிக்க மனிதவளத்தை இந்தியா உலகத்திற்கு அளித்து வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்ததற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் இத்தகைய பயிற்சிகள் மூலம் நலிவடைந்த பிரிவு மக்கள் பயனடைய முடியும் என்றும் பிரதமர் கூறினார். அண்ணல் அம்பேத்காரின் கனவை நினைவாக்கும் வகையில் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் இலக்கத்தை எட்டும் வகையில் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

See also  தமிழ் எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது - தமிழக அரசு அறிவிப்பு