கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 80 சதவிகிதம் பாதிப்பு பதிவானதாக குறிப்பிட்டார்.

மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கொரோனா இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பை சந்தித்ததாக மோடி கூறினார். எனவே மூன்றாவது அலையை தடுப்பது 6 மாநில அரசுகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா பரிசோதனை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசி செலுத்துவதில் மாநிலங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுத்ததற்காக ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் வெற்றி கரமாக ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி ஒதுக்கீடு மிக குறைந்த அளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனவே சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். கொரோனா மூன்றாவது அறையை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் சூழலில் நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்று பரவுதலுக்கு வழிவகுக்கும் என்பதால் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

See also  TNPSC தேர்வு வாரியத்திற்கு புதிய கட்டுப்பாட்டு செயலாளர் நியமனம்..!