தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளின் பக்கம் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் சில மாதங்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய உள்ளார்