நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் வாகனம் ஓட்ட பயிற்சி பெற்றவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறைகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்து உள்ளது.

புதிய விதிகளின் படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும். பயிற்சியாளர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். போக்குவரத்து குறியீடுகள் போக்குவரத்து விதிமுறைகள் வாகன கட்டமைப்பு பொது தொடர்பு முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும்.

வாகனங்களை மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு அமைப்புகளில் கற்பிக்க வேண்டும். இது போன்ற தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு சென்சார் பொருத்தப்பட்ட பிரத்தியேக ஓடுபாதையில் வாகனம் ஓட்டும் சோதனை நடத்தப்பட்டு அதை வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். இந்த பயிற்சிகளில் வெற்றி பெறும் ஓட்டுநர்கள் உரிய சான்றிதழ்களுடன் ஆர்டிஓ அலுவலகம் சென்று வாகனம் ஓட்டி காட்டாமலேயே லைசன்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

லஞ்சம் கொடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லைசன்ஸ் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற கடுமையான விதிமுறைகளை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ளது.

See also  தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!