டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர். போட்டி நடைபெற உள்ள டோக்கியோவின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஜப்பான் அரசை கவலை அடையச்செய்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசர கால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டோக்கியோ பெருநகரப் பகுதியில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்து வருகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைபிடித்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா கோரிக்கை விடுத்து உள்ளார். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜப்பானில் ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று அந்நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் கூறியிருக்கிறார். டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கவும் ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்து உள்ளனர். உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அவரச நிலை அறிவிக்கப்பட்டதால் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.

See also  இனி EB ரீடிங் எடுக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் - மின்சார வாரியம்